வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 2 Oct 2021 5:34 PM GMT (Updated: 2 Oct 2021 5:34 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடு பணிகளாக வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறையும், வாக்கு எண்ணும் அறைகளில் தடுப்புக்கட்டை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
காணை ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் மையமாக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறையும், வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புக்கட்டை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு அந்த அறையை சுற்றிலும் இரும்புக்கம்பிகளால் சுற்றிலும் வலை அடிக்கப்பட்டு வருகிறது.

சி.சி.டி.வி. கேமரா 

மேலும் தேர்தல் பார்வையாளர்கள் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, மருத்துவ குழுவினருடன் மருத்துவ அறைகளும் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. வாக்குகள் எண்ணும் இடம் மற்றும் அனைத்து அறைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்தவும், தடையில்லா மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி செய்வதற்கான பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. அதுபோல் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகளின் ஜன்னல்களை மரப்பலகைகள் மூலம் மூடும் பணியும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததும் வாக்கு எண்ணும் மையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்கள் இப்போதே தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணுவதற்கு ஏற்ப மையங்களை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அவ்வப்போது இப்பணிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர், மாவட்ட கலெக்டர், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story