வேலை இல்லாமல் கொத்தனார் வேலைக்கு செல்கிறேன் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுத ஆசிரியை நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு


வேலை இல்லாமல் கொத்தனார் வேலைக்கு செல்கிறேன் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுத ஆசிரியை நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 2 Oct 2021 5:38 PM GMT (Updated: 2 Oct 2021 5:38 PM GMT)

வேலை இல்லாமல் கொத்தனார் வேலைக்கு செல்கிறேன் என்று கூறி கிராம சபை கூட்டத்தில் கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுத ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம், 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த குணமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 

கூடுதல் கலெக்டர்கள் ரஞ்சித் சிங், பவன் குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் முருகவேணி ராஜா வரவேற்றார். 

கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு பெண் திடீரென்று கலெக்டர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே சென்று அவரது காலில் விழுந்து கதறி அழ தொடங்கினார்.

கொத்தனார் வேலை

அப்போது அவர், தனது பெயர் கொடியரசி. நான் எம்.எஸ்சி., பி.எட்.  படித்துள்ளேன். ஏற்கனவே தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தேன். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் எனது வேலையை இழந்து, தற்சமயம் எந்த வேலையும் இல்லாமல் இருந்தேன்.

 இதனால் வேறு வழியின்றி கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறேன். 
எனது கணவருக்கும் சரியான முறையில் வேலை இல்லை. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மேலும் போதிய வருமானம் இல்லாததால் வீட்டுக்கு வாடகையை கூட கொடுக்க முடியாமலும், சாப்பாடு இல்லாமலும் சாவின் விளிம்பில் உள்ளோம்.

கலெக்டர் உறுதி

மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் இது நாள் வரை எந்த வேலைக்கான அழைப்பும் வரவில்லை. இது மட்டுமின்றி தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித வேலை கிடைப்பதற்கான அழைப்பும் வரவில்லை. 

ஆகையால் எனக்கு ஏதேனும் ஒருவேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கதறி அழுதார். 

அப்போது கலெக்டர் பாலசுப்பிரமணியம், அந்த பெண்ணிடம் மனுவாக எழுதி கொடுங்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் அந்த பெண் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

கிராமங்கள் வளர்ச்சி

இதை தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைபிடித்திட வேண்டும். 

கிராமசபை கூட்டங்கள் மூலம் அந்தந்த கிராம வளர்ச்சிக்கு அனைத்து துறை அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு ஏதுவாக அமையும். 

மேலும் வார்டு பகுதிகளில் என்னென்ன மேம்பாட்டு திட்டங்கள் வேண்டும் என்பதை கண்டறிந்து கூறினால் உரிய நடவடிக்கை எடுத்து அந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, அசோக் பாபு, தாசில்தார் பலராமன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story