வெள்ளேரி ஊராட்சி தலைவியுடன் காணொலி மூலம் மோடி கலந்துரையாடல்


வெள்ளேரி ஊராட்சி தலைவியுடன் காணொலி மூலம் மோடி கலந்துரையாடல்
x
தினத்தந்தி 2 Oct 2021 7:17 PM GMT (Updated: 2 Oct 2021 7:17 PM GMT)

ஆரணி அருகே ‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டத்தை வெற்றிகரமாக முடித்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்த வெள்ளேரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசுகையில் எப்பொழுதும் தமிழகத்தை கவுரமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன் என பெருமிதத்துடன் கூறினார்.

ஆரணி

ஆரணி அருகே ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்த வெள்ளேரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசுகையில் எப்பொழுதும் தமிழகத்தை கவுரமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன் என பெருமிதத்துடன் கூறினார்.

ஜல்ஜீவன் மிஷன்

இந்திய அளவில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தனிநபர் வீடுகளுக்கு 100 சதவீத குடிநீர் வழங்கும் பணி முடிக்கப்பட்டதில் 5 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வெள்ளேரி கிராம ஊராட்சியும் ஒன்றாகும். காந்தி ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. ஜல்ஜீவன் மிஷன் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட வெள்ளேரி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊராட்சி மன்ற தலைவி சுதா சுப்பிரமணியத்துடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் பா.தட்சிணாமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மு.பிரதாப், ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சந்திரா, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுரமாக   
 பார்த்துக்கொண்டிருக்கிறேன்

பிரதமர் மோடி இந்தியில் பேசினார். பிரதமர் பேசியதை ஆரணி வெள்ளேரி அருகே ஆகாரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஷாமீளா தமிழாக்கம் செய்தும், ஊராட்சி தலைவர் சுதா தமிழில் பேசியதை இந்தியிலும் மொழி மாற்றம் செய்து பேசினார். 
ஊராட்சி தலைவி சுதாவிடம் பிரதமர் மோடி பேசுகையில் வணக்கம். சுதா, நான் பலமுறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறேன். நான் எப்பொழுதும் தமிழகத்தை கவுரமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன், கிராமத்தில் எப்படிப்பட்ட சக்தி இருக்கிறது என்பது குறித்து நீங்கள் கருத்து கூறுங்கள், உங்கள் ஊரில் ஆரணி பட்டு பெருமையாக உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கருத்து தெரிவிக்க முடியுமா  என்றார்.

அதற்கு சுதா பதிலளிக்கையில், ‘அய்யா எங்கள் பகுதியில் 20 சதவீதம் பேர் நெசவாளர்கள். ஆரணி பட்டு, உலகம் முழுவதும் பேசப்படுகிறது. உள்நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் பட்டு சேலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது எங்களுக்கு கிடைத்த பெருமையாகும்என்றார்.
சிரமம் குறைந்துள்ளது

தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், சுதா அவர்களே, உங்கள் கிராமத்தில் தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்ட சூழ்நிலையில் இருந்து தற்போது குடிநீர் கிடைக்கிறது. இதன் மூலமாக என்ன கருதுகிறீர்கள் என கேட்டார்.
இதற்கு சுதா பதில் அளிக்கையில் ஆமாம் அய்யா. குடிநீர் கிடைப்பதில் சிரமம் மிகவும் குறைந்துள்ளது. வீட்டுக்கு, குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதால் அதிக நேரம் மிச்சமாகிறது. அந்த நேரத்தை மற்ற பயனுள்ள வேலைகளுக்கு பயன்படுத்தியும், பட்டு சேலை உற்பத்தி உயர்த்தப்படுவதால் பொருளாதார ஏற்றத்திற்கு உயர்வாகவும் உள்ளது. குடிதண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிட்டது, தங்களுக்கு எங்களின் மிக்க நன்றி என்றார்.

பிரதமர் மோடி தொடர்ந்து பேசுகையில் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நான் பல முறை பார்த்துள்ளேன், சென்னை மக்களுக்கு குடிநீர் மிகவும் தட்டுப்பாடாக இருக்கிறது. தங்கள் கிராமத்தில் உங்கள் பகுதியில் குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காண முயற்சி செய்து உள்ளீர்களா?. மிக நீண்ட காலத்திற்கு பல ஆண்டுகளுக்கு உங்கள் கிராமத்தில் குடிநீர் தொடர்ந்து கிடைக்க என்ன முயற்சி செய்து உள்ளீர்கள்?’’ என்றார்.

ஊராட்சித் தலைவர் பதிலுரையில் பிரதமர் அவர்களே இதற்காகவும் நாங்கள் வேலை செய்து உள்ளோம் 2 செக்டேம் (தடுப்பணை)் கட்டப்பட்டுள்ளது, மேலும் கிராம ஏரி மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. இதனால் எதிர்வரும் மழைக்காலத்தில் தண்ணீர் தேக்கி வெயில் காலத்தில் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

மனமார்ந்த வாழ்த்துகள் 

பிரதமர் ேமாடி பேசுகையில் கிராம தலைவரான தங்களுக்கும், உங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது உங்களுக்கும் பெருமையாக இருக்குமல்லவா

ஊராட்சி தலைவி சுதா பதில் அளிக்கையில் ஆமாம் அய்யா. அனைவரும் மிக மகிழ்ச்சியாக உள்ளோம் என்றார்.

கூட்டத்தில் ஆரணி ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர், ஒன்றிய குழு துணைத் தலைவர் கே. டி.ராஜேந்திரன், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, சீனிவாசன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story