10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை-கிராமசபை கூட்டத்தில் புகார்

10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கிராமசபை கூட்டத்தில் புகார் செய்யப்பட்டது
திருப்பரங்குன்றம், அக்.3-
10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கிராமசபை கூட்டத்தில் புகார் செய்யப்பட்டது.
கிராம சபை கூட்டம்
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட விளாச்சேரியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோமதி, ஊராட்சி துணை தலைவர் முத்துலட்சுமி, ஊராட்சி செயலர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சக்திவேல் என்பவர் பேசும்போது ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 10 நாட்களாக குடிதண்ணீர் சப்ளை இல்லை என்றார். முகமதுபிச்சை(இந்திய கம்யூ.) பேசும்போது, விவசாய நிலத்திற்கு செல்லக்கூடிய ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார். இந்தநிலையில் விளாச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து டிரைவர், கண்டக்டர் கிராமசபை கூட்டத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் பேசும்போது, விளாச்சேரி பஸ் நிலையத்தில் நவீன கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த வேடர்புளியங்குளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கண்ணன், துணைத்தலைவர் கோபால், ஊராட்சி செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் பங்கேற்ற கிராம சபை கூட்டம் நடந்தது. திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலட்சுமி, கவுன்சிலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது. இதில் அய்யூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அபுதாஹிர் தலைமை தாங்கினார். துணை தலைவர் கனிமொழி நடராசன், யூனியன் அலுவலர் சந்திரலீலா, ஊராட்சி செயலர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லணை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அய்யம்மாள், ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயலு, ஒன்றிய பொறியாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சந்திரன் வரவேற்றார். மேலும் அ.கோவில்பட்டி, கீழசின்னப்பட்டி, சின்ன இலந்தைக்குளம், முடுவார்பட்டி, எர்ரம்பட்டி, செட்டிக்குளம், பெரியபட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. பொதும்பு ஊராட்சியில், ஊராட்சி தலைவர் சாந்தி தனசேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மருத்துவ அலுவலர் முத்துமாரி, குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் அருள்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.
மேலும் மதுரை கிழக்கு ஒன்றியம் காதக்கிணறு ஊராட்சியில் அதன் தலைவர் செல்வி சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
Related Tags :
Next Story