கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 2 Oct 2021 8:37 PM GMT (Updated: 2 Oct 2021 8:37 PM GMT)

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர்.

அரியலூர்:

பக்தர்கள் வழிபாடு
அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. புரட்டாசி மாதம் முழுவதும் இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கொரோனா பரவலை தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்களை பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை என்பதால் கல்லங்குறிச்சி நோக்கி ஏராளமான பக்தர்கள் வேன், கார், இருசக்கர வாகனங்களில் வந்து குவிந்தனர். ஆனால் கோவிலின் நடை சாத்தப்பட்டு இருந்ததால் நாலுகால் மண்டபத்தில் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர். பலர் கோவிலுக்கு வெளியே நின்று வழிபட்டனர்.
காணிக்கை செலுத்த முடியாமல்...
கோவிலில் காணிக்கை செலுத்த முடியாமலும், நேர்த்திக் கடனுக்காக தானியங்கள் மற்றும் ஆடு, மாடுகளை கொண்டு வந்தவர்களும் சிரமப்பட்டனர். பலர் கால்நடைகளை மீண்டும் வீட்டிற்கு ஓட்டி சென்றனர். தற்காலிக கடைகள் பரவலாக வைக்கப்பட்டு இருந்தன. பலர் வாகனங்களில் உணவு பொட்டலங்களை கொண்டு வந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். கோவிலுக்கு வந்த அனைவரும் கூட்டம், கூட்டமாக அமர்ந்து உணவு உண்டனர். பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியவில்லை. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்ததால் அரசு அதிகாரிகள், போலீசார், சுகாதாரத்துறையினர் அங்கு சென்று விட்டனர். இதனால் கோவிலில் போலீசாரோ, சுகாதாரத்துறையினர் பணியில் இல்லை.

Next Story