காந்தி சிலையிடம் கோரிக்கை மனு அளித்தனர்


காந்தி சிலையிடம் கோரிக்கை மனு அளித்தனர்
x
தினத்தந்தி 2 Oct 2021 8:47 PM GMT (Updated: 2 Oct 2021 8:47 PM GMT)

ராணிப்பேட்டை பெல்லில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல சங்கத்தினர் நூதன முறையில் காந்தி சிலையிடம் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பெல்லில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல சங்கத்தினர் நூதன முறையில் காந்தி சிலையிடம் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை பெல் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, காந்தி சிலைக்கு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கும் நூதன நிகழ்ச்சி நடைபெற்றது. 

அந்த மனுவில், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் மத்திய அரசு பணிகளிலும், மாநில அரசு பணிகளிலும், தனியார் துறைகளிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேம நல ஓய்வூதிய சட்டம் 1995-ன்படி பாரபட்சமற்ற முறையில் சமமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசையும், சேம நல வாரியத்தையும் பல அறவழிப் போராட்டங்கள் மூலம் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தி அவர்களே, உங்களின் பிறந்த நாளான இன்று எங்கள் கோரிக்கையை அளித்துள்ளோம். கனிவுடன் பரிசீலித்து மத்திய அரசையும் சேம நல வாரியத்தையும் வலியுறுத்தி எங்களுக்கு உரிய ஓய்வூதியத்தை பெற்றுத்தர வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது. 
இதில் ராணிப்பேட்டை பெல் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலசங்க பொதுச்செயலாளர் மோகனம், பொருளாளர் கணேசன், அமைப்பு செயலாளர் அப்துல் சுக்கூர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story