புத்திரகவுண்டம்பாளையத்தில் கிராமசபை கூட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் சாலைமறியல்-அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை


புத்திரகவுண்டம்பாளையத்தில் கிராமசபை கூட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் சாலைமறியல்-அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 2 Oct 2021 10:51 PM GMT (Updated: 2 Oct 2021 10:51 PM GMT)

புத்திர கவுண்டம்பாளையத்தில் கிராம சபை கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

பெத்தநாயக்கன்பாளையம்:
புத்திர கவுண்டம்பாளையத்தில் கிராம சபை கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிராமசபை கூட்டம்
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது புத்திரகவுண்டம்பாளையம் கிராம ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று காலையில் கிராமசபை கூட்டம் தொடங்கியதும், கூட்டம் நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ஊராட்சி நிர்வாகத்தினர், எதற்காக கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள் என்று கேட்டனர். அப்போது ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக சம்பளம் மற்றும் பணி வழங்கப்படவில்லை என்றும், அதற்காகத்தான் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினர்.
சாலைமறியல்
அப்போது 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திடீரென ஆத்திரம் அடைந்து புத்திரகவுண்டம்பாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பஸ் நிலையம் முன்பு அங்கு சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகே அவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சின்ன சோரகை
நங்கவள்ளி அருகே சின்ன சோரகை ஊராட்சி மன்றம் சார்பில் பால குட்டைவிநாயகர் கோவில் அருகில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த மன்னாதன் என்பவர், சாலை வசதி கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த நங்கவள்ளி ஒன்றியக்குழு தலைவர் பானுமதி பாலசுப்பரமணியம், நங்கவள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவ பிரபு (கிராம ஊராட்சி) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மன்னாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர், சாலை வசதி செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பிறகு அந்த நபர் சமாதானம் அடைந்தார். 
ஆனையம்பட்டி ஊராட்சி
கெங்கவல்லி அருகே ஆனையம்பட்டி ஊராட்சியில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வம் கலந்து கொண்டார். கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடிவடைந்தது. ஊராட்சி மன்ற துணை தலைவர் சுந்தரி மற்றும் 6 உறுப்பினர்கள் காலை 11 மணி அளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அலுவலகம் பூட்டி கிடந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் சுந்தரி தலைமையில் வார்டு உறுப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கெங்கவல்லி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story