மெரினா கடற்கரையில் தொடரும் சம்பவம்: ராட்சத அலையில் சிக்கி மேலும் 2 வாலிபர்கள் மாயம்


மெரினா கடற்கரையில் தொடரும் சம்பவம்: ராட்சத அலையில் சிக்கி மேலும் 2 வாலிபர்கள் மாயம்
x
தினத்தந்தி 3 Oct 2021 12:34 AM GMT (Updated: 3 Oct 2021 12:34 AM GMT)

மெரினா கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி மேலும் 2 வாலிபர்கள் மாயமாகி உள்ளனர். மேலும் ஒருவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் நிர்மல்குமார் (வயது 21). இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மதியம் நிர்மல்குமார் தனது நண்பர்களான மணலியை சேர்ந்த விஷ்வா தருண் (19), முருகன் (19), ஆகாஷ் (19) மற்றும் சூரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (19) ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார்.

நீச்சல் குளத்துக்கு பின்புறம் உள்ள கடலில் நண்பர்களுடன் நிர்மல்குமார் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிக்கி நிர்மல் குமார் மாயமானார்.

இதுப்பற்றி தகவல் அறிந்து வந்த மெரினா தீயணைப்பு நிலைய நீச்சல் வீரர்கள் கடலில் மாயமான கல்லூரி மாணவர் நிர்மல்குமாரை படகுகள் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரோகித்குமார் (20) தனது நண்பர்கள் 5 பேருடன் மெரினா கடற்கரைக்கு வந்து அண்ணா சமாதிக்கு பின்புறம் உள்ள கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி ரோகித்குமாரும் மாயமானார். ரோகித்குமாரையும் தேடும் பணியில் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டனர்.

அதேபோல் விஜயகுமார் (30) என்பவர் உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் நேற்று மதியம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி தத்தளித்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் நேற்றுமுன்தினம் மெரினாவில் நண்பர்களுடன் குளித்த நாமக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்(18) ராட்சத அலையில் சிக்கி மாயமானார். நேற்று அண்ணா சமாதி பின்புறம் அவரது உடல் கரை ஒதுங்கியது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 2 பேர் மெரினா கடலில் மாயமான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மெரினா கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் சென்று பொதுமக்கள் சென்று குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது.

Next Story