கீழ்ப்பாக்கத்தில் ‘லிப்டில்’ சிக்கி 5 பேர் பரிதவிப்பு; தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்


கீழ்ப்பாக்கத்தில்  ‘லிப்டில்’ சிக்கி 5 பேர் பரிதவிப்பு; தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்
x
தினத்தந்தி 3 Oct 2021 6:34 AM GMT (Updated: 2021-10-03T12:04:15+05:30)

சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை லட்சுமி தெருவில் 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 3-வது மாடியில் விளையாட்டு பயிற்சி கூடம், உடற்பயிற்சி கூடம் உள்ளது. இங்கு நேற்று காலை பயிற்சி முடித்துவிட்டு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 5 பேர் தரை தளத்துக்கு வருவதற்காக அங்குள்ள ‘லிப்டில்’ ஏறினர்.

‘லிப்ட்’ தரை தளத்துக்கு வந்தது. அவர்கள் வெளியே செல்ல முயற்சி செய்தபோது, ‘லிப்டின்’ கதவு திறக்கவில்லை. இதனால் 5 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். வெகுநேரமாக முயற்சி செய்தும் ‘லிப்ட்’ கதவை திறக்க முடியாமல் 5 பேரும் சுமார் அரை மணி நேரமாக பரிதவித்தனர். இதையடுத்து தங்களை காப்பாற்ற கோரி 5 பேரும் அபய குரல் எழுப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், 10 நிமிட போராட்டத்துக்கு பிறகு உள்ளே சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பிறகே 5 பேரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ‘லிப்ட்’ கதவு திறக்காததற்கு, அதில் ஏற்பட்ட பழுது தான் காரணம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.


Next Story