ஊரக உள்ளாட்சி தேர்தல்; விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்யும் வேட்பாளர்கள்


ஊரக உள்ளாட்சி தேர்தல்; விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்யும் வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 3 Oct 2021 8:47 AM GMT (Updated: 3 Oct 2021 8:47 AM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விதிமுறைகளை மீறி வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதாக பொதுமக்கள் குறறம்சாட்டினர்.

உள்ளாட்சித் தேர்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மையம், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை பொது மக்களிடம் கொண்டு செல்வதற்காக பல்வேறு விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.

தேர்தல் விதிமுறை மீறல்

இந்த நிலையில் பெரும்பாலும் கிராமப்பகுதியில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுவதால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அரசு மேம்பாலங்கள், அரசு கட்டிடங்கள், மாநில நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டைகள், தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டைகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் ரேஷன் கடை கட்டிடங்கள், பஸ் பயணிகள் நிழற்குடை உள்பட பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் புகைப்படம் மற்றும் சின்னங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். ஆனால் இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏதோ கண்துடைப்புக்காக நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டிய கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கலெக்டர் எச்சரிக்கை

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேற்று முன்தினம் அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லாமல் தேர்தல் விதிமுறை மீறி சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கையை மீறி் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு குக்கிராமங்களில் தொடர்ந்து வேட்பாளர்கள் அத்துமீறி தங்களது சுவரொட்டிகளை அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட்டி உள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி வேட்பாளர்கள் அரசு சார்ந்த இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story