தாமரைகுளத்தில் பழுதடைந்த மதகுகளால் வீணாகும் தண்ணீர்


தாமரைகுளத்தில்  பழுதடைந்த மதகுகளால் வீணாகும் தண்ணீர்
x
தினத்தந்தி 3 Oct 2021 1:19 PM GMT (Updated: 3 Oct 2021 1:19 PM GMT)

தாமரைகுளத்தில் பழுதடைந்த மதகுகளால் தண்ணீர் வீணாகிறது.

பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே தாமரைக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் சுமார் 113 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலமாக 600 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய்க்கு மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் வருகிறது. 
இந்த கண்மாயில் பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் மதகுகளில் 5-க்கும் மேற்பட்ட மதகுகள் உடைந்த நிலையில் உள்ளன. இதனால் மதகு வழியாக தண்ணீர் வந்துகொண்டே இருப்பதால், நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே நடவு பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தாமரைக்குளம் கண்மாயில் மதகுகள் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பழுதடைந்த மதகுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை சாக்கு மூட்டைகளை கொண்டு அடைத்தாலும் தண்ணீர் நிற்காமல் வீணாக வெளியேறுகிறது. மதகுகளை புதிதாக மாற்றியமைத்தால், இந்த நிலங்களில் 3 போகம் விவசாயம் நடைபெறும். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மதகுகளை புதிதாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story