கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டுகளிக்கவும், அங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிக்கவும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதன்படி நேற்று வாரவிடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே வாகனங்களில் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்ததால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதேபோல் ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்தனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி சென்றனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதேபோல் பாம்பார் அருவி, தேவதை அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
இதற்கிடையே கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்றும் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் பழைய, புதிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதேபோல் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Related Tags :
Next Story