கல்லார் மலைவாழ் மக்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்


கல்லார் மலைவாழ் மக்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2021 5:13 PM GMT (Updated: 3 Oct 2021 5:13 PM GMT)

கல்லார் மலைவாழ் மக்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

வால்பாறை

வால்பாறையில் கல்லார் மலைவாழ் மக்கள் குடியிருக்க இடம் கேட்டு 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

கல்லார் மலைவாழ் மக்கள்

வால்பாறையில் தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு அருகில் கல்லார் பழங்குடியின மலைவாழ் மக்கள் கிராமம் இருந்தது. இங்கு 23 குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வால்பாறை பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் கல்லார் பகுதியில் மண்சரிவும், பூமியில் விரிசலும் ஏற்பட்டது.

இதனால் பாதுகாப்பு கருதி மலைவாழ் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். சிலர் தெப்பக்குளமேடு பகுதியில் குடியிருப்பு அமைக்க முயன்றனர். ஆனால் அதற்கு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 இதையடுத்து அவர்கள் தாய்முடி எஸ்டேட்டில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டனர்.

உண்ணாவிரத போராட்டம் 

இந்த நிலையில் கல்லார் மலைவாழ் மக்கள், தங்களுக்கு தெப்பக்குளமேடு பகுதியில் குடியிருக்க இடம் கேட்டு அந்த பகுதியில் அமர்ந்து நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது அதிகாரிகளின்  பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனால் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

முதல்-அமைச்சருக்கு மனு

இதுகுறித்து கல்லார் மலைவாழ் மக்கள் கூறியதாவது:-
வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக தனியார் சிலர் காட்டேஜ், தங்கும் விடுதிகள் கட்டி செயல்படுத்தி வருகின்றனர். இவை அனைத்துமே வனத்துறையின் சட்டத்திற்கு விரோதமானது தான். 

அவர்களுக்கு அனுமதியளிக்கும் வனத்துறையினர் பழங்காலம் தொட்டு நாங்கள் பாதுகாத்து வைத்திருந்த வனப்பகுதிக்குள் எங்களுக்கு குடியிருக்க இடம் தரமறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எங்களுக்கு தெப்பக்குளமேடு பகுதியில் குடியிருக்க இடம் தரும் வரையில் நாங்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.  இதுதொடர்பாக முதல்-அமைச்சருக்கும் மனு அனுப்பியுள்ளோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story