கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை கண்காணிக்க 134 நுண்பார்வையாளர்கள் நியமனம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை கண்காணிக்க 134 நுண்பார்வையாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 3 Oct 2021 5:15 PM GMT (Updated: 3 Oct 2021 5:15 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவை கண்காணிக்க 134 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் கூறினார்

கள்ளக்குறிச்சி

பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சி தேர்தல் நாள் அன்று நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட திட்ட இயக்குநர்(ஊரக வளர்ச்சி முகமை) மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் கூறியதாவது:-

முன்னேற்பாடு பணிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதன் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில் தேர்தல் விதிமுறைகள்படி வாக்குப்பதிவு நடைபெறுவதை கண்காணித்திட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், எல்.ஐ.சி. மற்றும் தபால் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் உட்பட 134 அலுவலர்கள், நுண்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
இவர்கள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் உள்பட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். 

பயிற்சி, ஆலோசனை

மேலும் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், வாக்குப்பெட்டிகளை தேர்தலுக்கு தயார் படுத்துதல் குறித்தும், தேர்தல் பார்வையாளருக்கு அளிக்க வேண்டிய அறிக்கைகள் குறித்தும், பயிற்சியும் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி அளிக்கப்பட்டுள்ள 134 நுண்பார்வையாளர்களும் வாக்குப்பதிவு நாளன்று சிறப்பான பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.


Next Story