கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு


கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு
x
தினத்தந்தி 3 Oct 2021 6:22 PM GMT (Updated: 3 Oct 2021 6:22 PM GMT)

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல்வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

குடியாத்தம், அக்.4-

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல்வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று காலையில் குடியாத்தம் நகராட்சி மற்றும் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து குடியாத்தம் நகரில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது பெட்ரோல், டீசல் போட வருபவர்கள் முக கவசம் அணிந்து உள்ளனரா, சமூக இடைவெளி பின்பற்றி வருகின்றனரா, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றுகிறார்களா என்பதை பார்வையிட்டார்.

ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில்தாமஸ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம்கூறியதாவது:-

தடுப்பூசி போட்டால் மட்டுமே...

குடியாத்தம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது. விழிப்புணர்வை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் பிடிக்க வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களை காட்டினால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கவேண்டுமென பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும் பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக பெட்ரோல் பங்குகுகளில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்படுகிறது. 

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் 41 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது. முகாம்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா, வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார், சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) பிரபுதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஒடுகத்தூர்

அதேப்போன்று ஒடுக்கத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் ஊழியர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா, இல்லையென்றால் அவசியம் போட்டுக்கொண்டுதான் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் பெட்ரோல் போடவரும் அனைவரும் தடுப்புசி போட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பெட்ரோல் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

பள்ளிகொண்ட பஸ் நிறுத்தத்தில் நடந்த முகாமை ஆய்வு செய்த கலெக்டர் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற விவரத்தை கேட்டறிந்து, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கட்டாயமாக தடுப்புசி போடுவதற்ககான பணியில் ஈடுபட பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணியிடம் வலியுறுத்தினார்.
ஒடுக்கத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story