மரங்கள் வளர்ப்பதன் மூலம் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பை தடுக்கலாம்


மரங்கள் வளர்ப்பதன் மூலம் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பை தடுக்கலாம்
x
தினத்தந்தி 3 Oct 2021 7:40 PM GMT (Updated: 3 Oct 2021 7:40 PM GMT)

மரங்கள் வளர்ப்பதன் மூலம் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பை தடுக்கலாம் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

சிவகாசி, 
மரங்கள் வளர்ப்பதன் மூலம் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பை தடுக்கலாம் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார். 
ெபரியகுளம் கண்மாய் 
சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரைப்பகுதியில் நகராட்சி நிர்வாகமும், சென்ட்ரல் ரோட்டரி சங்கமும் இணைந்து மியாவாக்கி குறுங்காடு வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 இதன் தொடக்க விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார். நிகழ்ச்சியில் அசோகன் எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜ்குமார், நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி
நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாதரெட்டி பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் மாநகராட்சி இல்லை என்ற குறையை தற்போது தமிழக அரசு தீர்த்துள்ளது. மாநகராட்சியான பின்னர் சிவகாசி பகுதிக்கு பல வளர்ச்சி திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நிச்சயம் கொண்டுவரும். 
மரம் வளர்ப்பு மூலம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பை தவிர்க்க முடியும். சிவகாசியில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமுதாய ஆர்வலர்கள், பொது மக்கள் என அனைவரும் அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல் பட்டால் நிச்சயம் பசுமை பரப்பை அதிகரிக்க முடியும். 
சிவகாசி நகராட்சியை பொறுத்தவரை 70 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 
தொழில் அதிபர்கள்
நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் மகேஸ்வரன், காஞ்சனாபோஸ், அபிரூபன், ஆசைத்தம்பி, ஜெயக்கண்ணன், அரசன் கார்த்திக், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். மியாவாக்கி குறுங்காடு வளர்க்க வசதியாக நகராட்சி அலுவலகத்துக்கும், கண்மாய் கரைக்கும் இடையில் உள்ள பகுதியை ரோட்டரி சங்க நிர்வாகிகள் தயார் செய்து வைத்திருந்தனர். அதில் புண்ணை, நீர்மருது உள்பட 38 வகையான மரக்கன்றுகளை 1800 இடங்களில் நட்டுவைத்தனர். இந்த மரக்கன்றுகள் 2 வருடங்களில் மியாவாக்கி குறுங்காடுகள் போல் வளர்ந்து காட்சி தரும் என எக்ஸ்னோரா வெங்கடேசன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story