தடுப்பூசி முகாம்களை கலெக்டர் நேரில் ஆய்வு


தடுப்பூசி முகாம்களை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 3 Oct 2021 9:02 PM GMT (Updated: 3 Oct 2021 9:02 PM GMT)

குமரியில் நடந்த மெகா தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்:
குமரியில் நடந்த மெகா தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முகாம்களில் கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. 4-வது மெகா தடுப்பூசி முகாம், குமரி மாவட்டத்தில் நேற்று 510 இடங்களில் நடைபெற்றன.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வட்டக்கரை புனித வளனார் சமூக கூடம், மேலசூரங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி, முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளி, தொலையாவட்டம் புனித மேரி தொடக்கப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களிடம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்களிடம் தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்து பேசினார்.
முதன்மை மாவட்டமாக...
இதனைதொடா்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற 3 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதன் தொடர்ச்சியாக 4-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (அதாவது நேற்று) நடக்கிறது. முகாம்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வரை முதல் கட்டமாக 9 லட்சத்து 56 ஆயிரத்து 179 பேருக்கும், 2-ம் கட்டமாக 2 லட்சத்து 79 ஆயிரத்து 154 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தை கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் முதல் மற்றும் முன்மாதிரி மாவட்டமாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் அதிக தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில், 4-வது மாவட்டமாக குமரி மாவட்டம் இடம் பிடித்துள்ளது.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் பேசினார்.
இந்த ஆய்வின்போது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாநகர் நல அதிகாரி விஜய் சந்திரன், கிள்ளியூர் தாசில்தார் ஜூலியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story