ராட்சத அலையில் சிக்கி பெண் சாவு


ராட்சத அலையில் சிக்கி பெண் சாவு
x
தினத்தந்தி 3 Oct 2021 9:05 PM GMT (Updated: 3 Oct 2021 9:05 PM GMT)

ராஜாக்கமங்கலம் அருகே சுற்றுலா வந்த இடத்தில், ராட்சத அலையில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே சுற்றுலா வந்த இடத்தில், ராட்சத அலையில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையை சேர்ந்தவர்கள்
கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மனைவி ஜெசிந்தா (வயது 51). இவருடைய மகள் ஷேரன் ரிச்சா (23). 
நேற்று முன்தினம் ஜெசிந்தா, தனது மகள் மற்றும் உறவினர்களான என்.கே.பாளையம் பகுதியை சேர்ந்த ராணி (47), அவருடைய மகள் காவியா (23) ஆகியோருடன் குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். 
சுற்றுலா வந்தனர்
பின்னர் நேற்று காலையில் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த உறவினர் ஒருவரின் காரில் அனைவரும் சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். 
முதலில் முட்டம் பகுதியை சுற்றி பார்த்த அவர்கள், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆயிரங்கால் பொழிமுகம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு அனைவரும் கடலில் கால்களை நனைத்தபடி கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
 ராட்சத அலையில்...
அப்போது திடீரென எழுந்து வந்த ராட்சத அலை ஜெசிந்தா, ஷேரன் ரிச்சா, காவியா ஆகிய 3 பேரை கடலுக்குள் இழுத்து சென்றது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் ஓடி வந்து அலையில் சிக்கிய காவியா, ஷேரன் ரிச்சாவை மீட்டனர். ஆனால் ஜெசிந்தாவை மீட்க முடியவில்லை. அதற்குள் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது. 
பின்னர் சிறிது நேரம் கழித்து ஜெசிந்தாவின் உடல் கடலில் பிணமாக மிதந்தது. அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
சோகம்
இதையடுத்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ஜெசிந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுற்றுலா வந்த இடத்தில் ராட்சத அலையில் சிக்கி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story