‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Oct 2021 9:46 PM GMT (Updated: 3 Oct 2021 9:46 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உடனடி தீர்வு

சேலம் நரசோதிப்பட்டி முகில் நகர் 8-வது தெருவில் குப்பை தொட்டி இல்லாததால், குப்பை மற்றும் கழிவுகளை பொதுமக்கள் சாலையில் கொட்டி வந்தனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து நேற்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, அந்த பகுதி சுத்தப்படுத்தப்பட்டது. இதற்கு உடனடி தீர்வு கண்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும், அதற்கு உதவிய ‘தினத்தந்தி’க்கும் ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

ப.மங்கை அரசி, நரசோதிப்பட்டி, சேலம்.

சேலம் மாவட்டம் இடங்கணசாலை பேரூராட்சி 1-வது வார்டு மாட்டையாம்பட்டி கிழக்கு தெருவில் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் தண்ணீர் தேடி வெளி பகுதிகளுக்கு செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் நேற்று வெளியானது. அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) கோபிராஜா அங்கு உடனடியாக சென்று பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் பேரூராட்சி நிர்வாகத்துக்கும், ‘தினத்தந்தி’க்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

ஊர் பொதுமக்கள், இடங்கணசாலை, சேலம்.

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

கிருஷ்ணகிரி நகராட்சி 16-வது வார்டு ராசு வீதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவு நீர், குப்பைகள் மற்றும் மண்ணால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் குடியிருக்க முடியவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, முதியோர் இல்லத்தில் இருப்பவர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாய்களை தூய்மை படுத்த வேண்டும்.

ஊர் பொதுமக்கள், கிருஷ்ணகிரி.

நோயாளிகளின் உறவினர்கள் அவதி

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் புறநோயாளிகள் ஏராளமானவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளுக்கு தேவையான டீ, காபி, பிஸ்கட், பிரட் உள்ளிட்டவை வாங்க வேண்டுமானாலும் ஆஸ்பத்திரிக்கு வெளியே தான் செல்ல வேண்டிய உள்ளது. இதனால் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் கொரோனா காலத்தில் பூட்டப்பட்ட கடைகள் இன்னமும் திறக்கப்படவில்லை. இந்த கடைகளை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், ஆத்தூர். சேலம்.

சாலையில் திடீர் பள்ளம்
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை உழவர் சந்தை அருகே மழையால் ஆத்தூர்-சேலம் சாலையில் திடீர் பள்ளம் உருவாகி உள்ளது. இந்த பள்ளத்தை மறைப்பதற்காக பிளாஸ்டிக் சாக்குகளை அதற்குள் போட்டு வைத்துள்ளனர். இதனை கவனிக்காமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் இறங்குவதால் வாகனம் சேதமடைவதுடன், அவர்களும் காயம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்குமார், அம்மாபேட்டை, சேலம்.

சுகாதார வளாகம் தேவை

சேலம் மாவட்டம் இடங்கணசாலை கிழக்கு புளியம்பட்டியில் உள்ள அக்ரி முரளிதரன் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சுகாதார வளாகம் கட்டி கொடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், இடங்கணசாலை, சேலம்.

மழை நீர் வெளியேற  வசதி

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை 3-வது கிராசில் உள்ளது பாலாஜி நகர். இந்த பகுதியில் குழந்தைகள் அதிகமாக உள்ளனர். இங்கு லேசாக மழை பெய்தால் கூட கழிவு நீருடன் கலந்து மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு போன்ற நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மழை நீர் தேங்காதவாறு வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அம்மாபேட்டை, சேலம்.

சாலை, சாக்கடை கால்வாய் வசதி
சேலம் சீலநாயக்கன்பட்டி அருணைநகர் முதல் தெருவில் தார்ச்சாலை, சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அருணைநகரில் உள்ள பிற தெருக்களுக்கு இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எங்கள் தெரு அடிப்படை வசதிகள் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. எனவே தார்ச்சாலை, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

சு.ராதாகிருஷ்ணன், சீலநாயக்கன்பட்டி, சேலம்.

காவிரி ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வழியாக காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. இதனிடையே காவிரி இரட்டை பாலம் பகுதியில் ஆற்றை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனியாவது காவிரி ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்.

ஊர் பொதுமக்கள், பள்ளிபாளையம், நாமக்கல்.

குண்டும், குழியுமான சாலை 

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் நவப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கே வலது கரை கால்வாய் பாலம் வரை செல்லும் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குண்டும், குழியுமான சாலையால் அங்கு டிராக்டர் கவிழ்ந்து, 2 பேர் காயம் அடைந்தனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டும்.

ஆர்.மாதேஷ், நவப்பட்டி, சேலம்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை உழவர் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. சரிவர அமைக்கப்படாத அந்த சாலை நாளடைவில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளித்தது. ஏற்கனவே ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பழனிசாமி, குமாரசாமிபேட்டை

சாலை, சாக்கடை கால்வாய் வசதி

சேலம் சீலநாயக்கன்பட்டி அருணைநகர் முதல் தெருவில் தார்ச்சாலை, சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அருணைநகரில் உள்ள பிற தெருக்களுக்கு இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எங்கள் தெரு அடிப்படை வசதிகள் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. எனவே தார்ச்சாலை, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

சு.ராதாகிருஷ்ணன், சீலநாயக்கன்பட்டி, சேலம்.


Next Story