ஊரக உள்ளாட்சி தேர்தலில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை-கலெக்டர் தகவல்


ஊரக உள்ளாட்சி தேர்தலில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 Oct 2021 9:52 PM GMT (Updated: 3 Oct 2021 9:52 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்:
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்
இதுகுறித்து சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 35 பதவிக்கான தேர்தல் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படடனர்.
மீதமுள்ள 24 பதவிகளுக்கு மட்டும் வருகிற 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சாதாரண வாக்காளர்களுக்கும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சமூக இடைவெளி
இந்த தேர்தலுக்கு 195 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 1 லட்சத்து 22 ஆயிரத்து 857 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நடைபெற உள்ள 195 வாக்குச்சாவடிகளில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு வாக்குபதிவு அமைதியாக நடத்த கூடுதல் காவல்துறை பாதுகாப்பும், நுண்பார்வையாளர்கள் அல்லது வீடியோ கவரேஜ் செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான பிரசார கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும், கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் முககவசம் கட்டாயம் அணிந்திடவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும், விவரங்கள் பெறவும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1950 கட்டணமில்லா தொலைபேசியில் 12-ந் தேதி முடிய தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story