ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாததால் ஓட்டலுக்கு சீல்


ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாததால் ஓட்டலுக்கு சீல்
x
தினத்தந்தி 4 Oct 2021 12:36 PM GMT (Updated: 4 Oct 2021 12:36 PM GMT)

வேலூரில் 4 ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாததால் ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

வேலூர்

வேலூரில் 4 ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாததால் ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

கொரோனா தடுப்பூசி கட்டாயம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகைக்கடைகள், பேக்கரி, வணிக வளாகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 

தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள், ஊழியர்கள் பணிபுரியும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார். 

ஆனாலும் பல கடைகளில் தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணிபுரிவதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

அதையடுத்து அவரது உத்தரவின்பேரின் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ்குமார், சிவமணி, ரவிச்சந்திரன் ஆகியோர் இன்று வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள கடைகள், ஓட்டல்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

ஓட்டலுக்கு ‘சீல்'

அப்போது கிரவுன் தியேட்டர் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றிய 4 ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லை. 

அதையடுத்து அந்த ஓட்டல் ஷட்டரை மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதன் அருகேயுள்ள தின்பண்டங்கள் விற்பனை கடையில் பணிபுரியும் ஒருவர் தடுப்பூசி செலுத்தவில்லை. அதனால் அந்த கடையும் மூடப்பட்டது.

இதேபோன்று பழைய பஸ்நிலையம், சத்துவாச்சாரி, வேலப்பாடி, வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி, வணிகவளாகங்கள் என்று 23 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

ஓட்டல்களில் தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு தான் சாப்பாடு, உணவு பார்சல் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணிபுரியும் உணவு மற்றும் வணிகநிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும். 

அவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்த பின்னரே அவை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story