மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2021 2:50 PM GMT (Updated: 4 Oct 2021 2:50 PM GMT)

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஊட்டி

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு  மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக பெட்டி வைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு வந்தனர். 

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், 5 மாதங்களுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்து இருந்தனர். அவர்கள் சமூக இடைவெளிவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

டாஸ்மாக் குடோன்

தொடர்ந்து மனுக்கள் பெறப்பட்டு ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை எண், கைபேசி எண் பதிவு செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதற்கான ஒப்புகை சீட்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. முதல் நாள் என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 
நீலகிரி டாஸ்மாக் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளது. குன்னூரில் டாஸ்மாக் குடோன் செயல்பட்டு வருகிறது. ஊட்டியில் குடோன் இருந்தபோது, அதற்கான கட்டிட வாடகை குறைவாக இருந்தது. தற்போது கூடுதலாக 7 மடங்கு தொகை செலுத்துவதால் அரசின் பணம் செலவாகிறது. 

சாலை வசதி

மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தூரத்துக்கு ஏற்ப கூடுதலாக வாடகை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அரசின் பணம் விரயமாவதை தடுக்க ஊட்டிக்கு டாஸ்மாக் குடோனை இடமாற்றம் செய்ய வேண்டும்.

இது தவிர ஊட்டி சேரிங்கிராசில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இடம் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த இடத்தை டாஸ்மாக் குடோனாக பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பிக்கபத்தி மந்து பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களது கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் எப்பநாடு உள்ளது. அங்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி முதியவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story