கும்கி யானைகள் மீது அமர்ந்து சென்று 10-வது நாளாக தேடுதல் வேட்டை


கும்கி யானைகள் மீது அமர்ந்து சென்று 10-வது நாளாக தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 4 Oct 2021 2:51 PM GMT (Updated: 4 Oct 2021 2:51 PM GMT)

மசினகுடி வனப்பகுதியில் கும்கி யானைகள் மீது அமர்ந்து சென்று 10-வது நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் ஆட்கொல்லி புலியை அடையாளம் காண முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

கூடலூர்

மசினகுடி வனப்பகுதியில் கும்கி யானைகள் மீது அமர்ந்து சென்று 10-வது நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் ஆட்கொல்லி புலியை அடையாளம் காண முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

ஆட்கொல்லி புலி

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடியில் சமீபத்தில் 2 பேரை புலி கொன்றது. அந்த ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி நேற்று 10-வது நாளாக நடந்தது. அப்போது சிங்காரா வனப்பகுதியில் ஒரு புலி நடந்து செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு வனத்துறையினர் சென்று, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

மேலும் மசினகுடி-மைசூரு சாலையில் வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் ஒரு புலி நடந்து செல்வதாக தகவல் கிடைத்தது. உடனே சீனிவாஸ், உதயன் என்ற கும்கி யானைகள் மீது வனத்துறையினர் இருக்கைகள் அமைத்தனர். பின்னர் தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் மற்றும் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகளுடன் கால்நடை டாக்டர்கள் கும்கி யானைகள் மீது ஏறி அமர்ந்தனர். தொடர்ந்து புலி நடந்து சென்றதாக கூறப்பட்ட வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் டிரோன் மூலமும் தேடப்பட்டது. 

அடையாளம் காண முடியாமல் திணறல்

இதற்கிடையில் முதுமலை மோப்பநாய் அதவை, கர்நாடக மோப்பநாய் ராணாவுடன் சத்தியமங்கலம் மோப்பநாய் டைகரும் வரவழைக்கப்பட்டு, புலியை தேடும் பணி நடந்தது. ஆனால் புலியை காண முடியாததால், ஏமாற்றம் அடைந்தனர். எனினும் முதலில் கிடைத்த தகவலின்படி மாலை 3 மணியளவில் சிங்காரா வனப்பகுதியில் புலி நடந்து செல்வதை வனத்துறையினர் கண்டனர். 

ஆனால் அது தேடப்படும் ஆட்கொல்லி புலியா? என்பதை கண்டுபிடிப்பதற்குள் புதர்களுக்கு இடையே சென்று மறைந்தது. பின்னர் அந்த இடத்தை வனத்துறையினர் சுற்றி வளைத்து தேடியபோது புலி இல்லை. ஏதோ ஒரு வழியாக தப்பி சென்றிருக்கலாம் என தெரியவந்தது. இவ்வாறு ஆட்கொல்லி புலியை அடையாளம் காண முடியாமல் வனத்துறையினர் திணறினர்.

இரவில் வெளியே வர வேண்டாம்

மேலும் பொதுமக்களிடம் இருந்து புலி நடமாட்டம் குறித்து பல்வேறு தவறான தகவல்களும் வனத்துறைக்கு வந்தது. மாலை 5 மணியளவில் மசினகுடி வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் இருந்த வனத்துறை தேடுதல் குழுவினர் மற்றும் அதிரடிப்படையினர், கால்நடை டாக்டர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். கடைசி வரை ஆட்கொல்லி புலி குறித்து எந்த தகவலும் வனத்துறைக்கு கிடைக்கவில்லை. இதனால் மாலை 6 மணிக்கு தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டு வனத்துறையினர் வெளியே வந்தனர்.

மசினகுடி, சிங்காரா மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் இரவில் தனியாக வெளிய வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் சிங்காராவில் தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story