கடலூரில் 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்ற கலெக்டர்


கடலூரில் 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்ற கலெக்டர்
x
தினத்தந்தி 4 Oct 2021 5:21 PM GMT (Updated: 4 Oct 2021 5:21 PM GMT)

கடலூரில் 7 மாதங்களுக்கு பிறகு நடந்த வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்றார்.

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெறவில்லை. அதன் பிறகு கொரோனா ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததன் அடிப்படையில் கடந்த ஆண்டு இறுதியில் காணொலி காட்சி மூலம் நடந்தது.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி கலெக்டர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நேரடியாக மனுக்கள் பெற்றார். 3 வாரங்கள் மட்டுமே கலெக்டர் தலைமையில் குறைகேட்பு கூட்டம் நடந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.

மனுக்கள் பெற்ற கலெக்டர்

அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொண்ட பிறகு கொரோனா 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து குறைகேட்பு கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. மேலும் பொதுமக்கள் மனு அளிக்க வசதியாக, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை போட்டு வந்தனர்.

இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, மனுக்கள் பெற்றார்.

துரித நடவடிக்கை

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர், அதனை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் அலுவலகத்தின் வெளியே வந்து, அங்கு 3 சக்கர சைக்கிளுடன் மனு கொடுக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

கணினியில் பதிவு

முன்னதாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் காண்பித்து, அதனை கணினியில் பதிவு செய்து கொண்டனர். அதன் பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையிலேயே அவர்கள், கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்சித்சிங் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story