திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 1½ வருடங்களுக்கு பிறகு நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்


திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 1½ வருடங்களுக்கு பிறகு நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2021 5:43 PM GMT (Updated: 4 Oct 2021 5:43 PM GMT)

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 1½ வருடங்களுக்கு பிறகு மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்க பொதுமக்கள் குவிந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 1½ வருடங்களுக்கு பிறகு மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்க பொதுமக்கள் குவிந்தனர்.

மக்கள் குறை தீர்வு நாள்  கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமையன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் குறைத்தீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க அங்கு மனு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதில் கோரிக்கை மனுக்களை செலுத்தி வந்தனர். 

இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் குறைத்தீர்வு நாள் கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சுமார் 1½ வருடங்களுக்கு பிறகு நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவர்கள் மனுகொடுக்க வந்தவர்களை சோதனைசெய்து அனுப்பினர்.

உடனடி நடவடிக்கை

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து சாதி சான்று, உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மொத்தம் 645 மனுக்கள் பெறப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 9 பேருக்கு ரூ.22 ஆயிரத்து 470 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். 

சொந்த கட்டிடம் வேண்டும்

பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செப்டாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் தலைமையிலான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் செப்டாங்குளம் ஊராட்சியில் எடப்பாளையத்தில் இருந்து இஞ்சிமேடு செல்லும் பாதையை சிலர் தங்களுக்கு  சொந்தம் என்று சொல்லி பாதையை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் நலச்சங்கம் சார்பில் அளித்த மனுவில் ஜவ்வாதுமலை ஒன்றியம் கோவிலூர் ஊராட்சி அத்திப்பட்டு கிராமத்தில் மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு ஆங்கில வழிக் கல்வி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியை தொடங்கி தற்போது வரை செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் தற்போது வரையில் 420 பேர் தங்கி பிடித்து வருகின்றனர். மலைவாழ் மக்களின் பிள்ளைகள் 100 சதவீதம் கல்வியில் வளர்ச்சி பெறுவதற்கும், உயர் கல்வி பெறுவதற்கும் அத்திப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிக்கு நிரந்தரகட்டிட வசதி ஏற்படுத்தி ஜவ்வாதுமலையிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Next Story