கோவையில் 237 நாட்களுக்கு பிறகு குறைதீர்க்கும் கூட்டம் தொடங்கியது


கோவையில் 237 நாட்களுக்கு பிறகு குறைதீர்க்கும் கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 4 Oct 2021 6:20 PM GMT (Updated: 4 Oct 2021 6:20 PM GMT)

கோவையில் 237 நாட்களுக்கு பிறகு குறைதீர்க்கும் கூட்டம் தொடங்கியது

கோவை

கோவை கலெக்டர் அலுவலகத்தில் 237 நாட்களுக்கு பிறகு குறை தீர்க்கும் கூட்டம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். 

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்தது. சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 8-ந் தேதிக்கு பிறகு இந்த கூட்டம் நடத்தப்படவில்லை.

அதற்கு மாறாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்த பெட்டியில் பொதுமக்கள் மனு அளித்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், குறைதீர்க்கும் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 

237 நாட்களுக்கு பிறகு தொடங்கியது 

இதைத் தொடர்ந்து, 237 நாட்களுக்கு பிறகு நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். 

அதுபோன்று கோவை மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடக்கும் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற அனுமதி இல்லாததால், ஒரு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் அந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை போட்டு சென்றனர்.
 
491 மனுக்கள் 
7 மாதங்களுக்கு பிறகு குறைதீர்க்கும் கூட்டம் நடப்பதால் கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அவர்களை அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். அத்துடன் அவர்களின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது. 

மேலும் கோவை மாநகர மத்திய போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். நேற்று நடந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 491 மனுக்கள் அளிக்கப் பட்டன. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
விவசாயிகள் தர்ணா 

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட அவர்கள், கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.  

காரமடை அருகே உள்ள புத்தர் நகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால் இங்கு தெருவிளக்கு, சாலை, குடிநீர், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அதை உடனடியாக செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. 

கோவில்களை திறக்க வேண்டும்

இந்து முன்னணி சார்பில் கொடுத்த மனுவில், தனியாரால் ஆக்கிர மிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை உடனடியாக மீட்க வேண்டும் என கூறியிருந்தது. சக்தி சேனா சார்பில் அளித்த மனுவில் வார இறுதி நாட்களிலும் கோவில்களை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று உள்ளது. 

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 4 வருடங்களாக பரப்புரையாளர்கள் ஆக பணியாற்றி வந்த எங்கள் சங்கத்தை சேர்ந்த 20 பேரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் வேணுகோபால் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நிலங்களை கையகப்படுத்திஅனுப்பப்பட்ட பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 


Next Story