கருக்கலைப்புக்கு தவறான சிகிச்சை அளித்ததாக புகார் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உறவினர்கள் மறியல் தனியார் மருத்துவமனை சூறை


கருக்கலைப்புக்கு தவறான சிகிச்சை அளித்ததாக புகார் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உறவினர்கள் மறியல் தனியார் மருத்துவமனை சூறை
x
தினத்தந்தி 4 Oct 2021 6:20 PM GMT (Updated: 4 Oct 2021 6:20 PM GMT)

சின்னசேலத்தில் இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி தனியார் மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள் ஆம்புலன்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


சின்னசேலம்

கருக்கலைப்பு

சின்னசேலம் அருகே பாண்டியன்குப்பம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி சந்திரலேகா(வயது 29). இவருக்கு தேஜாஸ்ரீ(7), கிருத்திகா ஸ்ரீ(3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியான சந்திரலேகா சின்னசேலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 25-ந் தேதி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்தார்.
பின்னர் கடந்த 30-ந் தேதி சந்திரலேகாவுக்கு கருக்கலைப்பு மற்றும் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

சாலை மறியல்

பின்னர் அங்கிருந்து சந்திரலேகா மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியாததால் உயிருக்கு போராடிய சந்திரலேகாவை ஆரம்பத்தில் சிகிச்சை அளித்த சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்தவமனைக்கே டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். 
இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன்குப்பம் கிராம மக்கள் சின்னசேலம் தனியார் மருத்துவமனை முன்பு சந்திரலேகாவை ஏற்றி வந்த ஆம்புலன்சை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

மருத்துவமனை சூறை

அப்போது தவறாக சிகிச்சை அளித்த டாக்டரை கைது செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு சீல் வைத்து மூட வேண்டும், தவறான சிகிச்சையால் உயிருக்கு போராடும் சந்திரலேகாவுக்கு உரிய சிகிச்சை, இழப்பீடு மற்றும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  இதில் ஆத்திரம் அடைந்த சிலர் மருத்துவமனையின் உள்ளே புகுந்து  கண்ணாடி கதவுகளை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவலறிந்து சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி ஆகியோர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு, தனியார் மருத்துவமனையை சீல் வைத்து மூடினர்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சந்திரலேகாவை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிறப்பு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். இதையடுத்து கிராமமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சின்னசேலத்தில் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. Next Story