நடிகை நக்மா தலைமையில் திடீர் மறியல் மகிளா காங்கிரசார் போராட்டம்


நடிகை நக்மா தலைமையில் திடீர் மறியல் மகிளா காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2021 7:22 PM GMT (Updated: 4 Oct 2021 7:22 PM GMT)

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுவை ராஜீவ்காந்தி சதுக்கத்தில் மகிளா காங்கிரசார் நடிகை நக்மா தலைமையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுவை ராஜீவ்காந்தி சதுக்கத்தில் மகிளா காங்கிரசார் நடிகை நக்மா தலைமையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம்

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை ராஜீவ்காந்தி சதுக்கத்தில்  திடீரென்று மறியல் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவியும், நடிகையுமான நக்மா தலைமை தாங்கினார்.
 இதில் புதுவை மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி, நிர்வாகிகள் அஞ்சலாட்சி, ஜெயலட்சுமி, விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஜனநாயக படுகொலை

மறியலுக்கு பின்னர் நடிகை நக்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அறவழியில் போராடி வரும் அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தனது அதிகாரத்தை வைத்து விவசாயிகளை கொலை செய்கிறது. 
விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச அரசு கைது செய்து உள்ளது. இது ஜனநாயகப் படுகொலை. பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது.
எனவே பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும். அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். கொலை செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story