‘தினத்தந்தி’ புகார் பெட்டி: சாலையை சீரமைக்க வேண்டும்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Oct 2021 8:17 PM GMT (Updated: 4 Oct 2021 8:17 PM GMT)

சாலையை சீரமைக்க வேண்டும்

மார்த்தாண்டம் மேம்பாலத்துக்கு கீழே உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜாக்சன் ஜான்சன், கொல்லங்கோடு.
---------

விபத்து அபாயம்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள அருகுவிளை மற்றும் யாதவர் தெருவிற்கு செல்லும் தரைகற்கள் பதிக்கப்பட்ட சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதில் சிக்கி தினமும் வாகன விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சந்தானம், கிருஷ்ணன்கோவில்

மின் விளக்குகள் இல்லாத மின் கம்பங்கள்

கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட மணவிளை- திங்கள்சந்தை சாலையில் கொத்தன்குளம் தெற்குகரையில் 4 மின்கம்பங்கள் உள்ளன. இதில் இன்றளவிலும் மின் விளக்குகள் இல்லாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வழியாக இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் செல்ல அஞ்சுகின்றனர். இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  

குறிப்பாக இந்த பகுதியில் முந்திரி ஆலை உள்ளது. இதில் வேலைக்கு செல்லும் பெண்கள், இரவு நேரங்களில் இப்பகுதியில் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகள் அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 - குமார், சேங்கரவிளை.

சாலை அமைக்க வேண்டுகோள்

விளவங்கோடு அருகே புலியூர்சாலை ஊராட்சிக்குட்பட்ட பெரும்பிலாவில் இருந்து குட்டைக்கோடு மற்றும் ஆயவிளை செல்லும் வழித்தடம் மிகவும் மோசமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் முழுவதுமாக ஜல்லி மற்றும் சரல் கற்களாக நிறைந்து காணப்படுகின்றன. இதில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வியாபாரிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். வழித்தடம் மிகவும் மேசமாக உள்ளதால், அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 - அஸ்வின், ஆயவிளை.

கழிவு நீர் ஓடை சீரமைக்கப்படுமா?

தலக்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஆர்.சி. தெருவின் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகே கழிவுநீர் ஓடை செல்கிறது. ஓடையை மறைத்து சிமெண்டு சிலாப்புகள் போடப்பட்டுள்ளன. அதில் அமைக்கப்பட்ட ஒரு சிமெண்டு சிலாப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திறந்தவெளியில் கழிவுநீர் ஓடை தெரிகிறது. ஓடையை ஒட்டியுள்ள சாலையில் செல்லும் பொதுமக்கள், அதில் தவறி  சாக்கடையில் விழும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய விபத்து நடைபெறுவதற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ள சிலாப்பை மாற்றி அமைத்திட வண்டும்.

 - மூர்த்தி, தலக்குளம்.

சாலையில் வீணாகும் குடிநீர்

வீயன்னூர் பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்தது. இந்த நிலையில் போடப்பட்ட குடிநீர் குழாய்களில் தற்போது உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. மேலும் குடிநீர் சாலையில் ேதங்கி இருப்பதால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் வாகன விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். உடைப்பு ஏற்பட்ட குழாயை மாற்றி, குடிநீர் வீணாவதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜெகதீசன், வீயன்னூர்.

இருளில் மூழ்கும் தெரு

பரமார்த்தலிங்கபுரம் காமராஜர் தெருவில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதன் அருகே தீயணைப்பு நிலையமும் உள்ளது. இந்த தெருவில் உள்ள அனைத்து மின்கம்பங்களிலும், மின்விளக்குகள் எரியாமல் சேதமடைந்துள்ளன. இதனால் இரவு நேரங்களில் தெரு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ேமலும் அந்த வழியாக பெண்கள், குழந்தைகள் செல்ல அஞ்சுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எரியாத மின்விளக்குகளை அப்புறப்படுத்தி புதிய மின்விளக்குகளை பொருத்தி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

- பரமார்த்தலிங்கபுரம், கண்ணன்.


Next Story