விவசாயிகள் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்


விவசாயிகள் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Oct 2021 8:19 PM GMT (Updated: 4 Oct 2021 8:19 PM GMT)

விவசாயிகள் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:

 கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இந்திய கலாசாரம்

  நாடு எந்த திசையில் பயணித்து கொண்டிருக்கிறது என்பதை கண்டு மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். நாட்டில் விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் காவல் வாகனத்தை ஏற்றி 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்.

  விவசாயிகள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது வெறும் கொலை அல்ல. ஒட்டுமொத்த விவசாயிகள் கொலை செய்யப்படுவதற்கு சமம். இறந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை அம்மாநில போலீசார் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். இது ஒட்டுமொத்த பெண் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம். ஆறுதல் கூறுவது இந்திய கலாசாரம்.

எல்லை மீறிவிட்டது

  நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டது. சர்வாதிகாரி ஹிட்லர் மனநிலையுடன் ஆட்சி செய்பவர்களின் மோசமான செயல்பாடுகள் எல்லை மீறிவிட்டது. ராம ராஜ்ஜியம் ஏற்படுத்துவதாக கூறியவர்கள், ராவண ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளனர். கருத்து சுதந்திரத்தை மத்திய அரசு பறிக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக காங்கிரஸ் அமைதி வழியில் போராடி சுதந்திரம் பெற்று கொடுத்தது.

  புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி விவசாயிகள் டெல்லியில் கடந்த 10 மாதங்களாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை மத்திய அரசு அழைத்து பேசவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எப்போதும் போராடும். மத்திய பா.ஜனதா அரசு இனிமேலாவது ஜனநாயகம், அரசியல் சாசனத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

அரசியல் சாசனம்

  மத்திய பா.ஜனதா அரசை, மக்களே தூக்கி எறிந்து நாட்டின் அரசியல் சாசனம், ஜனநாயகத்தை காக்க வேண்டும். பிரியங்கா காந்தி மீதான தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும். சட்ட போராட்டம் நடத்த மாட்டோம்.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story