கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது


கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது
x
தினத்தந்தி 4 Oct 2021 8:48 PM GMT (Updated: 4 Oct 2021 8:48 PM GMT)

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது

நெல்லை:
நெல்லையில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கியது. அப்போது மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
வகுப்புகள் தொடக்கம்
தமிழகத்தில் கொரோனா பரவலையொட்டி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி பள்ளிக்கூடங்களில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலும், கல்லூரியில் 2-வது ஆண்டு, 3-வது ஆண்டு மற்றும் முதுநிலை படிப்புகளிலும் கடந்த மாதம் முதல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின. பாளையங்கோட்டை, நெல்லை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நேற்று முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது.
மாணவர்கள் உற்சாகம்
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்து வகுப்புகளுக்காக காத்திருந்த மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் நேற்று காலை கல்லூரிகளுக்கு புறப்பட்டு சென்றனர். ஒருசில மாணவர்களுடன் பெற்றோரும் கல்லூரிக்கு சென்று வழி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஒருசில கல்லூரிகளில் மூத்த மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை வரவேற்றனர். முதல் நாளில் கொரோனா விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.
பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
நெல்லை பேட்டை ராணிஅண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்கும், முதலாம் ஆண்டு முதுகலை மாணவிகளுக்கும் நேரடி வகுப்பு தொடங்கியது. கல்லூரி நுழைவாயிலில் மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
முன்னதாக கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவிகளுக்கு, கல்லூரி முதல்வர் மைதிலி பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர் கூறுகையில், “முதலாம் ஆண்டு இளநிலை மாணவிகள் 1,370 பேருக்கும், முதுகலை முதலாமாண்டு மாணவிகள் 350 பேருக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் கல்லூரியில் சில கட்டிடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாணவிகள் அனைவருக்கும் நேரடியாக வகுப்பறையில் பாடம் நடத்த வசதி இல்லை. இதனால் சில துறை மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன” என்றார்.

Next Story