நாட்டறம்பள்ளி அருகே பழையபேட்டையை ஊராட்சியாக மாற்றக்கோரி சாலை மறியல்


நாட்டறம்பள்ளி அருகே பழையபேட்டையை ஊராட்சியாக மாற்றக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Oct 2021 2:08 AM GMT (Updated: 5 Oct 2021 2:10 AM GMT)

நாட்டறம்பள்ளி அருகே பழையபேட்டையை ஊராட்சியாக மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை,

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதி வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 200 பேர் மற்றொரு பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்கு பதிவு செய்யும் வகையில் மாற்றப்பட்டது. இதனால் நாளை நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் ஏற்கனவே வாக்குப்பதிவு செய்த அதே வாக்குச் சாவடி மையத்தில் வாக்குபதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் பழைய பேட்டையை தலைமையிடமாக கொண்டு  ஊராட்சி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்து நேற்று மாலை நாட்டறம்பள்ளி குப்பம் செல்லும் சாலையில் பச்சூர் பஸ் நிறுத்தத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார், நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு குமார் ஆகியோர் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் உள்ளாட்சித் தேர்தல் முடிந்து ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்றதும் ஊராட்சி மன்ற கூட்டத்தில், பழைய பேட்டையை தனி ஊராட்சி ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றி அதன் நகல் மாவட்ட கலெக்டர் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என கூறினர். அதைத்தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story