ஆபாச படம் எடுத்து மிரட்டி 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் - உடற்பயிற்சியாளர் போக்சோவில் கைது


ஆபாச படம் எடுத்து மிரட்டி 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் - உடற்பயிற்சியாளர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 5 Oct 2021 4:27 AM GMT (Updated: 5 Oct 2021 4:27 AM GMT)

திருவள்ளூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய உடற்பயிற்சியாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளுர்,

திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் அதே பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறார். அந்த உடற்பயிற்சி கூடத்திற்கு அவருடைய மகன் அரவிந்தன் (வயது 21) என்பவர் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் அவருடைய உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த வாலிபர் ஒருவருக்கு அரவிந்தன் பயிற்சி கொடுத்து வந்தார். பின்னர் அவரை தினந்தோறும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டு வருவது வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அந்த வாலிபரின் சகோதரியான 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது. கடந்த 7 மாதங்களாக அந்த சிறுமியை உடற்பயிற்சி பயிற்சியாளர் அரவிந்தன் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து அவரை மிரட்டி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அந்த சிறுமி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமி நடந்த விஷயம் குறித்து தனது பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார்.இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உடற்பயிற்சியாளர் அரவிந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story