தொழில் தொடங்க கர்நாடகம் உகந்த மாநிலம் - பசவராஜ் பொம்மை பேச்சு


தொழில் தொடங்க கர்நாடகம் உகந்த மாநிலம் - பசவராஜ் பொம்மை பேச்சு
x
தினத்தந்தி 11 Oct 2021 9:09 PM GMT (Updated: 11 Oct 2021 9:09 PM GMT)

தொழில் தொடங்குவதற்கு கர்நாடகம் உகந்த மாநிலம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

அபாரமான நம்பிக்கை

  கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் உத்யமி ஆகு, உத்யோக கொடு (தொழில்முனைவோர் ஆகுங்கள்-வேலை கொடுங்கள்) என்ற பெயரில் கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  எதிர்காலத்தில் அனைத்து துறையிலும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கர்நாடகத்தில் தொழில் முதலீடுகள் செய்ய வருபவர்களுக்கு அதிகளவில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. முதலீடு, வேலை மற்றும் ஆராய்ச்சிக்கு எங்கள் அரசு அழுத்தம் கொடுக்கிறது. இளைஞர்கள் மீது எனக்கு அபாரமான நம்பிக்கை உள்ளது.

வேலை வாய்ப்புகள்

  தொழில் தொடங்கி அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் இளைஞர்களுக்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள், வரும் காலத்தில் தொழில்முனைவோராக மாறி முன்வரிசையில் அமரும் நிலை ஏற்பட வேண்டும். தொழில் தொடங்குவதற்கு கர்நாடகம் உகந்த மாநிலம் ஆகும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

  இந்த கருத்தரங்கில் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பேசுகையில், "இளைஞர்கள் படிப்பை முடித்த பிறகு வேலை தேடுவதை விட தொழில்முனைவோராக மாற வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை வழங்குபவர்களாக திகழ வேண்டும். இதுபோன்ற கருத்தரங்கு துமகூரு, கலபுரகி, பெலகாவி, மங்களூரு போன்ற நகரங்களிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் தான் இலக்கை அடைய முடியும்" என்றார்.

Next Story