சென்னை விமான நிலையத்தில் ரூ.77½ லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.77½ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Dec 2021 5:37 AM IST (Updated: 9 Dec 2021 5:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.77½ லட்சம் தங்கம் மற்றும் ரூ.19 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், எலக்ட்ரானிக் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்றதும், விமானத்தில் ஏறி ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது விமானத்தில் ஒரு இருக்கையின் அடியில் பார்சல் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

அந்த பார்சலை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் வாங்கி சோதித்தனர். அதில் ரூ.25 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 592 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் இருந்தன. அதனை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். கொழும்பில் இருந்து அதனை கடத்தி வந்த பயணி, சுங்க இலாகா சோதனைக்கு பயந்து, அதனை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது.

எலக்ட்ரானிக் பொருட்கள்

கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளிடம் இருந்து சுடிதார் பட்டன் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.29 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள 690 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணியின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.22 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 510 கிராம் தங்கம் மற்றும் ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புள்ள எல்க்டரானிக் பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் ெசய்தனர்.

வெளிநாட்டு பணம்

சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணியின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சேமியா பாக்கெட்டுகளில் வெளிநாட்டு பணத்தை மறைத்து கடத்திச் செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 79 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியாலை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் மொத்தம் ரூ.1 கோடியே 6 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், வௌிநாட்டு பணம் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story