பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த 3 பேர் கைது


பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த 3 பேர் கைது
x

மதுரையை கலக்கிய தொடர் கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 பவுன் நகை, ரூ.80 ஆயிரத்தையும் மீட்டனர்.

மதுரை, 

மதுரையை கலக்கிய தொடர் கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 பவுன் நகை, ரூ.80 ஆயிரத்தையும் மீட்டனர்.

தொடர் கொள்ளை

மதுரை மாநகர் அண்ணாநகர் மற்றும் கே.கே.நகர் ஆகிய பகுதிகளில்  பூட்டியிருக்கும் வீடுகளை பகல் நேரங்களில் நோட்டமிட்டு இரவில் வந்து வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதுபோல், மாட்டுத்தாவணி பஸ்நிலையம் மற்றும் மதுரை மாவட்ட கோர்ட்டு பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் ஆட்கள் அதிகமாக உள்ள இடங்களில் அவர்கள் கொண்டுவரும் கைப்பைகளில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடும் குற்றங்களும் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது.
இந்த தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில், துணை கமிஷனர் ராஜசேகரன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சூரக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன் மற்றும் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

7 வழக்குகள்

தனிப்படை போலீசார் பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொண்டனர். அதில், மதுரையில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மொய்தீன் (வயது 32), அவருடைய சகோதரர் சாதீக் பாட்சா மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த கோபிநாத் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர். 
விசாரணையில் அவர்கள் அண்ணாநகர், கே.கே.நகர், மாட்டுத்தாவணி, மதுரை மாவட்ட கோர்ட்டு உள்ளிட்ட பல இடங்களில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்தும், பஸ்சில் வரும் பயணிகளிடம் நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த 7 வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது.

45 பவுன் நகை

கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ஆகியவை மீட்கப்பட்டன. கொள்ளை கும்பல் நகைகளை உருக்கி கட்டியாக வைத்திருந்தனர். அதை போலீசார் கைப்பற்றினர். தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை, போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, துணை கமிஷனர் ராஜசேகரன் பாராட்டினர்.
=====


Next Story