முழு ஊரடங்கால் வெறிச்சோடிய நெல்லை


முழு ஊரடங்கால் வெறிச்சோடிய நெல்லை
x
தினத்தந்தி 23 Jan 2022 7:58 PM GMT (Updated: 23 Jan 2022 7:58 PM GMT)

முழு ஊரடங்கால் நெல்லை மாவட்டம் வெறிச்சோடியது.

நெல்லை:
முழு ஊரடங்கால் நெல்லை மாவட்டம் வெறிச்சோடியது.
 
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று தொடர்ந்து 3-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதனால் நெல்லை மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், காய்கறி மார்க்கெட்டுகள், மீன், இறைச்சி கடைகள், மதுபான கடைகள், மால்கள், பார்கள், டீக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டு இருந்தன. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் பாளையங்கோட்டை உழவர் சந்தை, டவுன் மார்க்கெட், நயினார்குளம் மார்க்கெட் மூடப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. 

சாலைகள் வெறிச்சோடின
மேலும் முழு ஊரடங்கில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நெல்லை சந்திப்பு மேம்பாலம், வண்ணார்பேட்டை மேம்பாலம், பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மேம்பாலம், டவுன் எஸ்.என்.ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலம், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, சமாதானபுரம், மார்க்கெட், தச்சநல்லூர், மேலப்பாளையம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்காக ஒரு சில வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. முழு ஊரடங்கால் பொதுமக்களும் வீடுகளில் முடங்கினர்.
இதேபோல் மாவட்டத்தில் அம்பை, களக்காடு, ராதாபுரம், கல்லிடைக்குறிச்சி, நாங்குநேரி, திசையன்விளை, உவரி உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

ரெயில் நிலையம்
அத்தியாவசிய தேவைகளான மருத்துவம், பால் உள்ளிட்ட சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஒரு சில ஓட்டல்களும் திறந்து இருந்தன. அங்கு உணவு பார்சலில் மட்டும் வழங்கப்பட்டது.
ரெயில்கள் இயக்கப்பட்டதால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு ெரயிலில் நேற்று காலையில் ஏராளமான பயணிகள் வந்தனர். அவர்கள் அங்கிருந்து வாடகை ஆட்டோ, கார், வேன்களில் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. 

2,800 போலீசார் கண்காணிப்பு
நெல்லை மாவட்டத்தில் முழு ஊரடங்கை கண்காணிக்க மாநகர பகுதியில் போலீஸ் துணை கமி‌ஷனர் டி.பி.சுரேஷ்குமார் தலைமையில் 1,100 போலீசாரும், புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 1,700 போலீசாரும் என மொத்தம் 2,800 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
மேலும் சோதனை சாவடிகள், தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாலைகளில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் சிலரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story