ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2022 9:34 PM GMT (Updated: 23 Jan 2022 9:34 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் இந்த பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை பல்வேறு ரேஷன் கடைகளில் தொடங்கி வைத்தார். அதன்படி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
21 பொருட்கள்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4-ந் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பு மற்றும் துணிப்பையும் சேர்த்து 21 பொருட்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களால் நடத்தப்படும் ரேஷன்கடைகள் என அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பிறகும் இந்த பொருட்கள் வழங்கப்பட்டு, யாரும் விடுபடாத வகையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
7 லட்சத்து 40 ஆயிரம்
மாவட்டத்தில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 71 ரேஷன் அட்டைகள் அரிசி அட்டைகளாக உள்ளன. இந்த அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள 1,382 ரேஷன் அட்டைதாரர்கள் என மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 453 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.7 கோடியே 2 லட்சம் ஆகும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்ற பொதுமக்கள் தமிழக அரசு வழங்கிய பொருட்களால் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கழிந்தது என்று கூறி உள்ளனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதுபற்றி சித்தோடு சக்திநகர் பகுதியை சேர்ந்த பிரதீஸ் என்பவர் கூறியபோது, ‘எனது தந்தை நெசவு தொழில் செய்து வருகிறார். நான் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறேன். பொங்கல் பரிசுத்தொகுப்பு எங்களுக்கு கிடைத்ததால் எங்கள் குடும்பத்துக்கு தேவையான பொங்கல் பொருட்கள் வாங்க தனியாக கடைக்கு செல்ல தேவை இல்லாமல் இருந்தது. கொரோனா காலத்தில் கடைவீதிக்கு செல்ல அவசியமில்லாத நிலை ஏற்பட்டது’ என்றார்.
அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவர் கூறும்போது, ‘பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட அனைத்து பொருட்களும் தரமாக இருந்தன. கொரோனா காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை இலவசமாக தந்ததால் மகிழ்ச்சியாக கொண்டாடினோம்’ என்றார்.
லட்சுமி தியேட்டர் ரோடு பகுதியை சேர்ந்த கமலா என்பவர் கூறும்போது, ‘எனது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நான் தனியாக இருக்கிறேன். என்னைப்போன்றவர்கள் பொங்கல் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாட ரேஷன் கடையில் இலவச பொருட்கள் வழங்கியதால் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடினேன்’ என்றார்.
இதுபோல் பொதுமக்கள் பலரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

Next Story