வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்


வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 11:10 AM GMT (Updated: 24 Jan 2022 11:10 AM GMT)

வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

அம்மாபாளையம் அருகே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது. 
பாறைக்குழி
திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2 வது மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் பூண்டி ரிங்ரோட்டில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டு வந்தது. அந்த பாறைக்குழி நிரம்பியதால் அம்மாபாளையத்தை அடுத்த கானக்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில்  சில மாதங்களாக அங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு குப்பை கொட்டுவதால் பாறைக்குழியை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி குப்பை கொட்ட அப்பகுதி மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
மேலும் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறி அந்த பகுதி மக்கள்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அங்கு திருப்பூர் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக குப்பை கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தியும் அம்மாபாளையம் பகுதியில் கருப்பு கொடி போராட்டம் நடத்த அனைத்து கட்சிகள், சுற்று வட்டாரத்தை சேர்ந்த அனைத்து குடியிருப்போர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
போராட்டம்
 இதன்படி நேற்று காலை முதலே அம்மாபாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கடைகள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது. மேலும் குப்பைக் கொட்டப்படும் பாறைக்குழியை சுற்றி உள்ள ராதாகிருஷ்ணன் வீதி, ராம்நகர், பட்டேல்நகர், நீலக்காடு, சுகம் ரெசிடென்சி, பழனியப்பாநகர், சொர்ணபுரி கார்டன், முல்லைநகர், பாரதிநகர், அம்பேத்கர்நகர், தண்ணீர்பந்தல்காலனி, திருப்பூர் குமரன் நெசவாளர் காலனி, ஐஸ்வர்யா கார்டன் உள்பட 36-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள  வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
 இந்த நிலையில் நேற்று காலை 8 மணி வரை பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி லாரிகள் மூலமாக குப்பை கொட்டி வந்த நிலையில் அம்மாபாளையத்தில் கருப்புக் கொடி போராட்டம் காரணமாக குப்பை லாரிகள் அந்த பகுதிக்கு செல்லவில்லை. அனைத்து லாரிகளும் அவினாசி ரோடு தண்ணீர்பந்தல்காலனி பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசியது.


Next Story