திருவள்ளூர் அருகே ரூ.5 லட்சம் திருட்டு போனதாக பொய் புகார் அளித்தவரை எச்சரித்து அனுப்பிய போலீசார்

திருவள்ளூர் அருகே ரூ.5 லட்சம் திருட்டு போனதாக பொய் புகார் அளித்தவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் பல்லவன் திருநகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவரது வீட்டில் கடந்த 17-ந்தேதி பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்கள் உரிமையாளர்கள் வந்தவுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். தனது வீட்டில் ரூ.5 லட்சம் மற்றும் 1 பவுன் தங்க நகையை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக ராஜேஷ் மணவாள நகர் போலீசில்புகார் அளித்திருந்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கொண்டு அவர்கள் இருப்பிடத்தை கண்டு பிடித்த போலீசார் காசிமேட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் (27), திருநின்றவூரை சேர்ந்த பார்த்திபன் (40) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அப்போது கொள்ளையடிப்பதற்காக வீட்டில் சென்றது உண்மைதான் பணத்தையும், நகையையும் அப்படியே அங்கேயே விட்டு, விட்டு உரிமையாளரை தாக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக தெரிவித்தனர். ராஜேஷை வரவழைத்து விசாரித்ததில் பொய் புகார் கொடுத்தது அம்பலமானது. அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 2 பேரும் பல்வேறு கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கத்தி, ரூ.1300 போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story