தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை
x
தினத்தந்தி 24 Jan 2022 5:21 PM GMT (Updated: 24 Jan 2022 5:26 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

ஏற்கனவே நடந்த 34 கட்ட விசாரணையில் 1,037 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. கடந்த மாதம் முதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒருநபர் ஆணையத்தின் 35-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது.

இதில் ஆஜராக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த கபில்குமார் சரத்கர், தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் மற்றும் உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. 

இதில் அப்போதைய நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், தற்போதைய சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனருமான கபில்குமார் சரத்கர் நேற்று ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

கபில்குமார் சரத்கர் சம்பவத்தின்போது தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே பாதுகாப்பு பணியில் இருந்தபோது நடந்த சம்பவங்கள் மற்றும் அதை தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து ஆணையத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது வாக்குமூலத்தை ஆணையத்தில் பதிவு செய்தனர். இந்த விசாரணை வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story