சுடுகாட்டு பாதை பிரச்சினையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண உதவி வாங்க மறுப்பு


சுடுகாட்டு பாதை பிரச்சினையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண உதவி வாங்க மறுப்பு
x
தினத்தந்தி 24 Jan 2022 5:43 PM GMT (Updated: 24 Jan 2022 5:43 PM GMT)

கலசபாக்கம் அருகே சுடுகாட்டு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினர் நிவாரண உதவிகளை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று வழங்கினார்.

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே சுடுகாட்டு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினர் நிவாரண உதவிகளை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று வழங்கினார்.

சுடுகாட்டு பாதை பிரச்சினை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட வீரளூர் கிராமத்தில் கடந்த வாரம் சுடுகாட்டு பாதை பிரச்சினை காரணமாக வன்முறை ஏற்பட்டது. இதில் அருந்ததியின மக்கள் வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்டன. 

தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ. சரவணன் ஆகியோர் முன்னிலையில் சமரச கூட்டம் நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வீரளூர் கிராமத்தை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரூ.20½ லட்சம் நிவாரண உதவி

நேற்று காலை 10 மணி அளவில் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கலெக்டர் முருகேஷ், சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில், துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நிவாரண உதவிகளை வாங்க யாரும் வராததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் வீரளூர் கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட 41 அருந்ததியின குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் விதம் ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

Next Story