கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் செபஸ்தியார் சிலை உடைப்பு


கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் செபஸ்தியார் சிலை உடைப்பு
x
தினத்தந்தி 24 Jan 2022 5:50 PM GMT (Updated: 24 Jan 2022 5:50 PM GMT)

கோவை டிரினிட்டி ஆலய வளாகத்தில் இருந்த செபஸ்தியார் சிலை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை

கோவை டிரினிட்டி ஆலய வளாகத்தில்  இருந்த செபஸ்தியார் சிலை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

டிரினிட்டி ஆலயம்

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே, டிரினிட்டி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு ஏராளமான கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆலயம் அடைக்கப்பட்டு இருந்தது. 

அங்கு காவலாளி ஜான்சன் என்பவர் பணியில் இருந்தார். இந்த நிலையில் இரவு 10.30 மணியளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 ஆசாமிகள் முகக்கவசம் அணிந்து வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று ஆலய நுழைவு வாசல் அருகே தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

கெபிக்குள் இருந்த சிலை உடைப்பு

பின்னர் அவர்கள் அங்கு வந்து ஆலய நுழைவு வாயில் அருகே உள்ள கெபியில் கண்ணாடி கூண்டுக்குள் இருந்த செபஸ்தியார் சிலையை உடைத்து சேதப்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி ஓடி வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் அங்கு காணவில்லை. உடனே அவர் இது குறித்து பாதிரியார் பாஸ்டின் ஜோசப்புக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து வந்து பார்வையிட்டார்.

போலீசார் விசாரணை

பின்னர் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அங்குள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் சாலை பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் 2 பேர் முகக்கவசம் அணிந்து வந்து சிலையை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் கள்? என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் எண் தெளிவாக பதிவாகி இருப்பதால் அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனிப்படை அமைப்பு

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்துக்கு கோவை பி.ஆர்.நடராஜன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

 திட்டமிட்டு சிலையை சேதப்படுத்தி மத துவேசத்தை தூண்டிவிட்டு ஆதாயம் தேடும் முயற்சி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார். 


Next Story