கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை


கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jan 2022 9:55 PM GMT (Updated: 24 Jan 2022 9:55 PM GMT)

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டம் ரத்து
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கும் வகையில் மனுக்கள் பெரும் பெட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அந்த பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.
வீட்டுமனை பட்டா
தலித் விடுதலை கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் சக்திநகர், ஊஞ்சலூர் அருகே கருக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிதிராவிட மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வீட்டுமனை கேட்டு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. விரைவில் அவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
திருமண உதவித்தொகை
பவானியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-
பவானி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் திருமண உதவித்தொகை கோரி கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து உள்ளோம். அதற்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. பின்னர் பவானி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அசல் ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் கொடுத்து உள்ளோம். கடந்த டிசம்பர் மாதம் வரை உதவித்தொகை குறித்த எந்த தகவலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 3-ந் தேதி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அதற்கு மாவட்ட சமூகநல அதிகாரிகள் பதில் அளித்தபோது, உரிய சான்றுகள் இணைக்கப்படாததால் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்று தெரிவித்தனர். அனைத்து ஆவணங்களும் இணைத்து விண்ணப்பித்து உள்ள நிலையில் எங்களது விண்ணப்பத்தை கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கு திருமண உதவித்தொகை கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
மாற்று இடம்
ஈரோடு சத்திரோடு சூளை பாரதிநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-
பாரதிநகர் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பெரும்பாலானவர்கள் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக அங்கேயே வசித்து கூலி வேலைக்கு சென்று வருகிறோம். தற்போது சாலை மேம்பாட்டு பணிக்காக எங்களது வீடுகளை இடிக்க உள்ளதாக நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. கூலித்தொழில் செய்து வருவதால் நாங்கள் வேறு இடத்திற்கு செல்லும் வசதி இல்லை. எனவே எங்களது வீடுகளை இடிக்கும் முன்பு அதே பகுதியில் மாற்று இடமும், வீடும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
கீழ்பவானி வாய்க்கால்
கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-
கவுந்தப்பாடி அருகே கஞ்சநாயக்கனூர், மேட்டூர், ஊராளிமேடு, காசிலிங்ககவுண்டன்புதூர், செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து 48-வது மைலில் உள்ள இந்த பாசன பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மழைக்காலத்தின்போது வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல நாட்கள் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் பயிர் சாகுபடி, பராமரிப்பு பணிகள் தாமதமாகின. தற்போது பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்தநிலையில் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட உள்ளது. வாய்க்காலுக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டால் மகசூல் பாதிப்பு ஏற்படும். எனவே வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்ட காலத்தை கணக்கிட்டு கூடுதலாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் விவசாயிகள் கூறிஇருந்தனர்.
சோதனை தீவிரம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும் கோரிக்கை மனுக்களை வழங்க பொதுமக்கள் பலர் வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு அமைக்கப்பட்ட தடுப்புகள் வழியாக பொதுமக்கள் வரிசையாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பொதுமக்கள் கொண்டு வந்த பைகளை போலீசார் சோதனையிட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். அப்போது தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கும் வகையில் மண்எண்ணெய், பெட்ரோல் கேன்களை பொதுமக்கள் கொண்டு வருகிறார்களா? என்று தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

Next Story
  • chat