விழுப்புரம் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் நகைக்காக கொலையா? போலீசார் தீவிர விசாரணை


விழுப்புரம் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் நகைக்காக கொலையா? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 25 Jan 2022 4:38 PM GMT (Updated: 25 Jan 2022 4:38 PM GMT)

விழுப்புரம் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் நகை- பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த துலுக்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். 

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

கருவாடு விற்பவர்

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்த அந்த பெண், துலுக்காநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யாவு மனைவி முத்தம்மாள் (வயது 55) என்பதும், இவர் அப்பகுதியில் கருவாடு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 

பிணமாக கிடந்தவர் முத்தம்மாள் என்பதை அவர் அணிந்திருந்த உடை மற்றும் அவர் கருவாடு விற்க கொண்டு செல்லும் அன்னக்கூடையை வைத்து அவரது மகன் ராஜீவ்காந்தி உறுதி செய்தார்.

மேலும் அவர், கடந்த 11-ந் தேதியன்று காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்ட தனது தாய் முத்தம்மாள் இதுவரையிலும் வீடு திரும்பாத நிலையில் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை, இந்த சூழலில் தற்போது அவர் கரும்பு தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார், 

அவர் கழுத்தில் 5 பவுன் தாலிச்சங்கிலி அணிந்திருந்ததாகவும், கையில் ரூ.10 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்ததாகவும், தற்போது அந்த நகை, பணம் எதுவும் இல்லை என்றும் போலீசாரிடம் ராஜீவ்காந்தி கூறியுள்ளதாக தெரிகிறது.

நகைக்காக கொலை?

இதன் அடிப்படையில் முத்தம்மாளை யாரேனும் மர்ம நபர்கள் நகை- பணத்திற்காக கொலை செய்து விட்டு அவரது உடலை கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து, முத்தம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நகை- பணத்திற்காக முத்தம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவர் இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து கண்டமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

2 வாரங்களுக்கு முன்பு காணாமல்போன பெண், தற்போது கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story