குமரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி


குமரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 25 Jan 2022 4:52 PM GMT (Updated: 25 Jan 2022 4:52 PM GMT)

குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். மேலும் புதிதாக 1,068 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். மேலும் புதிதாக 1,068 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
1,068 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டியே உள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் மொத்தம் 4,485 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,068 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஆண்கள் 530 பேர், பெண்கள் 538 பேர்.  இதில் அதிகபட்சமாக நாகர்கோவில் மாநகரில் மட்டும் 182 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இறப்பு விகிதம்
கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் கட்டுக்குள் உள்ளது.  மாவட்டத்தில் பெரும் பாலானோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா பாதித்தவர்கள் உடனுக்குடன் குணமாகி வீடு திரும்புகிறார்கள். 
ஆனால் ஏற்கனவே வேறு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருபவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளது.
2 பேர் பலி
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையில் இதுவரை 7 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 2 பேர் உயிரை கொரோனா காவு வாங்கி உள்ளது.  அதாவது நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்த 63 வயதான ஆண் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் இறந்தார். அவருக்கு இணை நோய்கள் அதிகமாக இருந்ததால் பலியானதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதே போல குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவரும் கொரோனாவுக்கு பலியானார். இதன் மூலம் கொரோனா 3-வது அலையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Next Story
  • chat