கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல்


கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Jan 2022 6:10 PM GMT (Updated: 25 Jan 2022 6:33 PM GMT)

கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து காலதாமதம் இன்றி இழப்பீடு தொகையை வழங்கக்கோரி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் கவலூர் சுப்பாராஜ், மாவட்ட தலைவர்கள் சவுந்திரபாண்டியன், நடராஜன், வெள்ளத்துரை, மாவட்ட துணைத்தலைவர் சாமிய்யா, மகளிர் அணி தலைவர் ரேணுகா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பயணியர் விடுதி அருகில் திரண்டனர். மாவட்ட தலைவர் எஸ்.எம்.ராமையா தலைமையில் தாலுகா தலைவர்கள் ரவீந்திரன், சந்திரமோகன், தாலுகா செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வேலாயுதம், லெனின்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்டோர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். 

சிறிது தூரத்தில் அவர்களை போலீசார் மறித்தனர். இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 69 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story