முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு


முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 25 Jan 2022 6:19 PM GMT (Updated: 25 Jan 2022 6:19 PM GMT)

வேதாரண்யம் அருகே முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்விரோதம்
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை கிணற்றடி பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது29). இவர் வேதாரண்யம் அருகே உள்ள போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்து வருகிறார். அதே தோப்புத்துறை மெயின்ரோட்டில் வசித்து வருபவர் சிவகணேஷ். விவசாயி. இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. 
இந்த நிலையில் சம்பவத்தன்று சரத்குமார் தனது நண்பர் ஹரி கிருஷ்ணனுடன் மோட்டார் சைக்கிளில் தோப்புத்துறை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே டிராக்டர் ஓட்டி வந்த சிவ கணேஷ், சரத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது டிராக்டரை மோதுவது போல் சென்றுள்ளார். 
அரிவாள் வெட்டு
அதை பார்த்து சுதாரித்து கொண்ட சரத்குமார் மோட்டார் சைக்கிளை ஓரமாக ஓட்டி சென்றுள்ளார். பின்னர். ஏன் இப்படி செல்கிறாய்? என்று சிவகணேசிடம், சரத்குமார் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவகணேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால்  சரத்குமாரை வெட்ட முயன்றுள்ளார். இதனால் சுதாரித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிய அவரை விரட்டி சென்று வெட்டியுள்ளார். 
இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சரத்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் வலைவீச்சு
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவகணேசை வலைவீசி தேடிவருகின்றனர். 

Next Story