கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை பிப்ரவரி 2-வது வாரத்தில் கட்டுக்குள் வரும் - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேச்சு


கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை பிப்ரவரி 2-வது வாரத்தில் கட்டுக்குள் வரும் - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேச்சு
x
தினத்தந்தி 25 Jan 2022 7:52 PM GMT (Updated: 25 Jan 2022 7:52 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை பிப்ரவரி 2-வது வாரத்தில் கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு:

மூளை சுகாதார திட்டம்

  தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம்(நிமான்ஸ்) மற்றும் நிதி ஆயோக் ஆகியவை சார்பில் மூளை சுகாதார திட்ட தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது வீட்டில் இருந்தபடி காணொலியில் கலந்து கொண்டு அந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  மூளை சுகாதார திட்டம் முதல் கட்டமாக பெங்களூரு, கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து டாக்டர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்படும். கொரோனா தொற்று நோய் பரவ தொடங்கியதில் இருந்து நிமான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து மனநல பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

மனநல பிரச்சினைகள்

  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கானோருக்கு மனநல ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். மனநல பிரச்சினைகள் உடல் நலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். இந்த பணியை நிமான்ஸ் ஆஸ்பத்திரி சிறப்பான முறையில் செய்கிறது. புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கும் மனநல பிரச்சினை குறித்து பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

  பல்வேறு சமூக-பொருளாதார பிரச்சினைகள் மற்றும் குடும்ப பிரச்சினை போன்றவற்றால் மக்கள் மனநல பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் மனநல சுகாதாரம் குறித்து அதிக டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பாதிப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.

பயப்பட தேவை இல்லை

  மொத்த கொரோனா நோயாளிகளில் 2 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள். இது கொரோனா பாதிப்பின் தீவிரம் அதிகமாக இல்லை என்பதை காட்டுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் 5, 6 நாட்களில் குணம் அடைகிறார்கள். அதனால் தற்போதைய நிலையில் கொரோனாவை கண்டு யாரும் பயப்பட தேவை இல்லை. கொரோனா 3-வது அலை வருகிற பிப்ரவரி மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் கட்டுக்குள் வரும்.

  மாநிலத்தில் 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது. 84 சதவீதம் பேருக்கு 2 டோஸ் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி போடப்பட்டதால் தான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களிடம் நோயின் தீவிரம் குறைவாக காணப்படுகிறது. பொது சுகாதாரம் குறித்த ஒரு தொலைநோக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை வருகிற 28-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிடுகிறார்.
  இவ்வாறு சுதாகர் பேசினார்.

Next Story