ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது


ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது
x
தினத்தந்தி 26 Jan 2022 1:37 PM GMT (Updated: 26 Jan 2022 1:37 PM GMT)

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால், ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குன்னூர்

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால், ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரேலியா அணை

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக விளங்குவது, ரேலியா அணை ஆகும். இந்த அணை, குன்னூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பந்துமி என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்து உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட அந்த அணை, அப்போதைய குன்னூர் நகர மக்கள் தொகையின் அடிப்படையில் 43.7 அடி கொள்ளளவில் கட்டப்பட்டது. ரேலியா அணையின் நீராதாரங்களாக ஊட்டி அருகே உள்ள மைனலை நீரூற்றுகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் நீரூற்றுகளில் ஏற்படும் வெள்ளத்தால் அணை நிரம்பி வழிகிறது.

முழு கொள்ளளவு

இதற்கிடையில் கடந்த ஆண்டு குன்னூர் பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் ரேலியா அணை 4 முறை தனது முழு கொள்ளளவை எட்டி இருந்தது. இந்த மாதத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக தனது முழு கொள்ளளவான 43.7 அடியை ரேலியா அணை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தடுப்பணை கட்ட வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் ரேலியா அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அணையில் இருந்து உபரி நீர் வீணாக வெளியேறுவது வாடிக்கையாக இருக்கிறது. இதை தடுக்க அணைக்கு அருகில் தடுப்பணை கட்ட வேண்டும். இந்த நடவடிக்கையை எடுத்தால், உபரி நீரும் சேகரிக்கப்பட்டு, கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story